திருநெல்வேலி-தென்காசி ரயில் பாதையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மார்ச் 13 இல் ஆய்வு
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி- தென்காசி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி அண்மையில் முடிவடைந்தது. அங்கு விரைவில் ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் (Principal Chief Electrical Engineer) திருநெல்வேலி- தென்காசி ரயில் பாதையை ஆய்வு செய்ய உள்ளார். மார்ச் 13 ஆம் தேதி நடைபெறும் ஆய்வில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் மற்றும் தெற்கு ரயில்வே தலைமையகம், ரயில்வே மின்மயமாக்கல் மற்றும் மதுரை கோட்டத்தின் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இந்த ஆய்வு திருநெல்வேலியில் காலை 9:30 மணிக்கு தொடங்கி, மதியம் 1:45-க்கு தென்காசியில் முடிவடைகிறது. தொடர்ந்து அதிவேக சோதனை ஓட்டம் உள்ளிட்ட ஆய்வுகள் மாலை 4:30 மணியளவில் திருநெல்வேலியில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தென்காசி பிரிவு:
மதுரை ரயில்வே கோட்டத்தில் திருநெல்வேலி- தென்காசி பிரிவின் மொத்த தூரம் (Route Kilometre ) 72.02 கிலோ மீட்டர் ஆகும். இந்த பிரிவில் உள்ள மொத்த இருப்புப்பாதை தூரம் (Track Kilometre) 81.51 கிலோ மீட்டர் ஆகும். இந்தப் பிரிவில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்ச்சத்திரம் மற்றும் தென்காசி ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன.
ரயில்வே மின்மயமாக்கலின் ஒரு பகுதியாக வீரவநல்லூரில் புதிய துணை மின் நிலையம் தொடங்கப்பட உள்ளது. மேட்டூர் மற்றும் பேட்டையில் மின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் துணை பிரிவு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், மின்மயமாக்கும் பணி, விருதுநகர் - தென்காசி 122.16 கிலோ மீட்டர், தென்காசி- பகவதிபுரம் 14.105 கிலோ மீட்டர் தூரம் மற்றும் எடமண் -புனலூர் 8.428 கிலோ மீட்டர் பிரிவுகளில் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu