ஆதரவற்ற விடுதியில் மூன்று சிறுவர்கள் பலி; திருப்பூரில் பரபரப்பு

ஆதரவற்ற விடுதியில் மூன்று சிறுவர்கள் பலி; திருப்பூரில் பரபரப்பு

திருப்பூரில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 11 குழந்தைகள் உடல்நலம் குறித்து, கலெக்டர் வினீத் விசாரணை நடத்தினார்.

திருப்பூர் அருகே விவேகானந்த சேவாலயா விடுதியில், காலை உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே 'விவேகானந்தா சேவாலயம்' என்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்கு பெற்றோர் இல்லாத, ஆதரவற்ற குழந்தைகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. விவேகானந்தா சேவாலயம் சார்பில், இங்குள்ள குழந்தைகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. விசேஷ நாட்களில், நன்கொடையாளர் சார்பிலும், குழந்தைகள் உணவுக்கான செலவுத்தொகை வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கு அறுசுவை வழங்கப்படுவது வழக்கம். பல ஆண்டுகளாக, இந்த விடுதி செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல, விடுதியில் உள்ள சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள், அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் ஐந்து குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்கொண்ட உணவு கெட்டு போயிருந்ததாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இறந்த மாணவர்கள் மூவரும் 10 வயது முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள். இந்த விடுதியில் போலீஸார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 17 சிறுவர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் 14 சிறுவர்களுக்கு, திடீரென வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. காப்பகத்தில் பரிசோதித்த போது அங்கு மாதேஷ், அத்தீஷ் ஆகிய இரு சிறுவர்கள் இறந்துவிட்டனர். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் இருந்த பாபு என்ற சிறுவனை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் அங்கு உயிரிழந்தான்.

மேலும் 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் வினீத் ஆய்வு நடத்தினார். குழந்தைகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்கள் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றார்.


இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகர் விடுதியில் ஆய்வு நடத்தினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று காலை மாணவர்களுக்கு இட்லி, சட்னி, வெண் பொங்கல், கொண்டைக் கடலை குழம்பு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட அனைத்து சிறுவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று மதியம் வெறும் ரசம் சாதம் மட்டுமே வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு காய்ச்சல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவ அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என தெரிவித்திருந்தார். மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ள குழந்தைகள், தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு குறித்த, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது, உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூரில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், இந்த சம்பவம் குறித்து, நேரில் விசாரணை நடத்தி தகவலறிக்கை சமர்பிக்க, மருத்துவ குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story