சென்னை விமான நிலையத்தில் தங்கம், நவரத்தின கற்கள் கடத்திய மூவர் கைது
சென்னை விமான நிலையத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட தங்கம், நவரத்தின கற்கள் சிக்கியது.
Gold Smuggling Case -சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், பயணித்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த ரகீம் (வயது 30), ஆலந்தூரை சேர்ந்த முகமது ஆசீப் (32) ஆகியோரை விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. மேலும் அவர்களை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.59 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 281 கிராம் தங்கமும், ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நவரத்தின கற்கள் சிக்கியது
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த தங்கராஜா (37) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் விலை உயர்ந்த நவரத்தின கற்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.23 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 1,706.05 கேரட் நவரத்தின கற்களை கைப்பற்றினார்கள். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 281 கிராம் தங்கம், 1,706 கேரட் விலை உயர்ந்த நவரத்தின கற்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் லேப்டாப்கள் சிக்கியது. இதுகுறித்து, மூன்று பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu