வெள்ளத்தால் மூடப்பட்ட உணவகங்கள் திறப்பதற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்
Safety Guidlines For Hotels And Food Suppliers
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களை தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில், உணவின் மூலம் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு, வெள்ளத்தின் காரணத்தினால் உணவகங்களை மூடியுள்ள உணவு வணிகர்கள், தங்களது உணவகத்தினைத் திறப்பதற்கு முன்பு பல்வேறு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
உணவகத்தைத் திறந்தவுடன், சமையலறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தூய்மையான தண்ணீர் கொண்டு, நன்றாக கழுவி, பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின்னர், தெளிப்பான் மூலம் கிருமி நாசினியைத் தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்கும் போது, கிருமிநாசினி உணவுப் பொருட்களில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கழிவறையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கீழ்நிலை மற்றும் மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் இருந்தால், அதனை முழுமையாக வெளியேற்றி, தொட்டியை நன்றாகக் கழுவி ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இருப்பறையில் தண்ணீர் தேங்கி இருந்தால், அவ்வறையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட வேண்டும். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்தால், பொருட்களின் காலாவதி காலம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
சமைப்பதற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது, குளோரின் கலந்த குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக பரிசோதனை செய்து, அழுகாமல் அல்லது பூச்சிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே, அவற்றைப் பயன்படுத்த வேண்டும். அழகிய காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை பயன்படுத்துதல் கூடாது.
கொதிக்க வைத்த இளஞ்சூடான குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அல்லது உள்ளாட்சிகள் மூலம் வழங்கப்படும் குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை மட்டுமே நுகர்வோருக்கு வழங்க வேண்டும். உணவுப் பொருட்களைத் தயாரித்த இரண்டரை மணி நேரத்திற்குள் பயன்படுத்திடல் வேண்டும். பேக்கரிகளை மீண்டும் திறக்கும் சமயத்தில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும்.
உணவைக் கையாளும் நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்தால், அவர்கள் குணமாகும் வரை உணவுப் பொருட்களைக் கையாள அனுமதிக்கக் கூடாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுத் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களை சுத்தம் செய்த பின்னர் தான் இயக்க வேண்டும்.
பொதுமக்களின் பொது சுகாதார நலன் சார்ந்த விடயம் என்பதினால், உணவு வணிகர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, உணவு வணிக வளாகத்தினை சுத்தம் செய்து, உணவின் மூலம் ஏற்படக்கூடிய நோய்கள் ஏற்படாமல் தடுக்க மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகின்றோம். மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, உணவகங்களில் இப்பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்து உறுதிசெய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu