தூத்துக்குடியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல்
தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட இளைஞர் கணேஷ்.
தூத்துக்குடியில் இன்று பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சுப்புலட்சுமிக்கு தூத்துக்குடி டி.எம்.பி. காலனி பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான சுடலைமணி என்பவருடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த பழக்கத்தை ஆவுடையப்பன் கண்டித்துள்ளார். இதையடுத்து சுப்புலட்சுமி குடும்பத்தினரை விட்டு பிரிந்து சுடலைமணியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஆவுடையப்பனின் மகனான கணேஷ் சுடலைமணியின் வீட்டிற்கு சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது தாயையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தூத்துக்குடி டி.எம்.பி காலனி பகுதியில் பைக்கில் சென்ற கணேசை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆவுடையப்பனின் உறவினர்கள் கொலையுண்ட கணேசனின் உடலை வாங்க மறுத்து கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக்கோரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இளைஞர் கணேசனை அவரது தாய் சுப்புலட்சுமி, அவருடன் பழக்கத்தில் உள்ள சுடலைமணி ஆகியோர் சேர்ந்து கொலை செய்துவிட்டதாகவும், அவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu