தூத்துக்குடியில் பட்டப்பகலில் பழிக்குப்பழியாக இளைஞர் தலை துண்டித்து கொலை

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பழிக்குப்பழியாக இளைஞர் தலை துண்டித்து கொலை
X

தூத்துக்குடியில் கொலை நிகழ்ந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சலவைக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சலவை கூடம் வளாகத்தில் அமைந்துள்ள சலவைத் தொழிலாளர் கூடத்தில் மந்திர விநாயகர் திருக்கோயில் எதிரே உடல் இல்லாமல் தலை மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தென்பாகம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் மற்றும் தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான காவல்துறையினர் அந்தப் பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த தலையை எடுத்துச் சென்றனர். மேலும், போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, காவல்துறையினர் அடுத்தடுத்து நடத்திய விசாரணையில் தலை இல்லாமல் மாரியப்பனின் உடல் தூத்துக்குடி மையவாடி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட மாரியப்பன் கடந்த ஏப்ரல் மாதம் அவரது உறவினரான சப்பாணி முத்து என்பவரை சலவை கூடத்தில் வைத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் கைதான மாரியப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.

இதற்கிடையே, சப்பாணி முத்துவின் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் அவரது உறவினர்கள் சிலர் மாரியப்பனை கொடூரமாக தலை துண்டித்து படுகொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையெடுத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக தலை துண்டித்து மாரியப்பன் என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!