விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த இளைஞர் கைது

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட மொஹத் அபுஷார்கான்.

தூத்துக்குடி மாவட்டத்தில், விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இளைஞரை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி ராணி என்பவரின் செல்போன் எண்ணுக்கு திருச்சி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த ராணி தனது மகனின் வேலைக்காக அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

எதிர்முனையில் பேசிய நபர் பல்வேறு காரணங்களை கூறி ராணியிடம் இருந்து 16 லட்சத்து 61 ஆயிரத்து 38 ரூபாய் பணத்தை மோசடியாக பெற்று ஏமாற்றி உள்ளனர். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராணி இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

ராணி அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார், சைபர் குற்ற பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ராணியிடம் பணம் மோசடி செய்தவர் டெல்லி, ஜமீயாநகர் பகுதியை சேர்ந்த மொஹத் காலிக்கான் மகன் மொஹத் அபுஷார்கான் (22) என்பது தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் டெல்லி சென்று மொஹத் அபுஷார்கானை கடந்த 17.09.2023 அன்று புதுடில்லி ஷாஹீன்பாக் காவல் நிலையம் முன்பு கைது செய்து, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று பின்னர் இன்று தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், மொஹத் அபுஷார்கான் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். கைதான மொஹத் அபுஷார்கானிடம் இருந்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மொஹத் அபுஷார்கான், பொதுமக்களிடம் மோசடியாக பணத்தை பெற்று, வேறு சிலரின் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அவரது அண்ணன் வங்கி கணக்குகளிலும் மோசடி செய்த பணத்தை பெற்று பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியில் மேலும் சில நபர்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களை கைது செய்யும் வகையில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்