தூத்துக்குடி குறைதீர் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி குறைதீர் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
X

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிப்பது உண்டு.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 368 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மனு அளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் இலவச தேய்ப்பு பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!