தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் சீரமைப்பு பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செச்தார்.
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் மழையால் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் சேதங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடித்திடும் வகையில், நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் முத்தையா, அரசு சிறப்புச் செயலாளர் முருகன், தலைமைப் பொறியாளர் பொன்ராஜ் ஆகியோர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்களை கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆறு மற்றும் சிற்றாறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைச் சீரமைக்கும் பொருட்டு தேவையான கட்டுமான தளவாடப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்ப அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களை வழங்கிடவும் உரிய உதவிகளை உடனடியாக செய்யவும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும், வருங்காலங்களில் வெள்ள நீரினை கோடை காலத்திற்கு பயன்படுத்தும் வகையில் சேமித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கோவை மற்றும் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர்கள் சீரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள், கள தொழில் நுட்ப அலுவலர்கள் ஆகிய பணிகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யவும் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா கூறியதாவது:
சீரமைப்பு பணியின் முன்னேற்ற விவரங்கள் நீர்வளத்துறைக் கட்டுபாட்டிலுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆறுகள் ஏரிகள் கால்வாய்களில் சேதமடைந்த பகுதிகளாக 689 அடையாளம் காணப்பட்டன. இதில் 65 சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது மற்றும் 152 சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
சேதமடைந்த 470 சீரமைப்புப் பணிகள் கண்டறியப்பட்டு சீர்செய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் திருச்சி மற்றும் கோவை மண்டலங்களில் இருந்து மதுரை மண்டலத்திற்கு 3 செயற்பொறியாளர்களும், 42 உதவி செயற் பொறியாளர்களும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 12 செயற்பொறியாளர்களும் 20 உதவி செயற்பொறியாளர்களும் மாற்றுப் பணி வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர் என நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu