தூத்துக்குடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்
X

தூத்துக்குடி அருகே உப்பள நிறுவன ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

தூத்துக்குடி அருகே குளத்தை தனியார் உப்பள நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் அரசு நிலங்களை தனியார் உப்பு நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் பெருமாள் புரம் கிராமத்தில் உள்ள குளத்தை தனியார் உப்பு நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்றக் கோரி கிராம மக்கள் ஊருக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் பெருமாள் புரம் கிராமம் முற்றிலும் விவசாயத்தை நம்பி உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 100 ஏக்கரில் இந்த கிராமத்திற்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தை மாதவன் சால்ட் என்ற தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து குளத்தின் கரை பகுதிகளில் உப்பளம் அமைத்து வருவதுடன் குளத்தில் உள்ளே உப்பு நீரை விட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தின் நீர் உப்பு நீராக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் மாதவன் சால்ட் என்ற தனியார் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் குளத்துநீர் உப்பாக மாறுவதை தடுக்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை இதற்கு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தங்களது வாழ்வாதாரமான குளத்து நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க கோரி மாதவன் சால்ட் தனியார் நிறுவனம் குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததை உடனடியாக அகற்றக் கோரியும் ஸ்ரீவைகுண்டம் பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் ஊருக்கு வெளியே ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால் தங்களது ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஒப்படைக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த பத்து தினங்களுக்கு முன்பு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தகவல் தெரிவித்தும் அவர் இந்த பிரச்சினையை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகையினால் தமிழக அரசு உடனே தலையிட்டு தங்கள் கிராமத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த குளத்தை மீட்டு தர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தினர் தூத்துக்குடி அருகே கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!