விளாத்திக்குளம் நகைக் கடையில் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு.. 2 பேர் கைது…

விளாத்திக்குளம் நகைக் கடையில் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு.. 2 பேர் கைது…
X

விளாத்திக்குளத்தில் திருட்டு நடைபெற்ற நகைக்கடை.

விளாத்திக்குளத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அம்பாள்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர், அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். இந்தநிலையில், அதிகாலை விளாத்திக்குளம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நகை கடைக்கு பின்புறம் ஆள்நடமாட்டம் இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நகைக்கடையின் சுவர் வழியாக இரண்டு பேர் பைகளுடன் இறங்கி வந்ததைப் பார்த்த போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது வெள்ளி பொருட்களும் தங்க நகைகளும் இருந்தன.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விளாத்திக்குளம் அருகே அரியநாயகிபுரம் காலனி தெருவை சேர்ந்த மாரிமுத்து (34), மார்த்தாண்டம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பே நகைகளை திருடுவதற்கு ஏதுவாக கதவுகளை உடைக்கும் இயந்திரங்களை கடையின் மாடியில் கொண்டு வைத்துவிட்டு வந்துள்ளதும், நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு கடையின் பின்புறம் வழியாக கயிர் மூலம் மாடிக்கு சென்று அங்கே இருந்து உள்ளதும் தெரியவந்தது.

மேலும், அதிகாலை 2 மணிக்கு மேல் நகை கடையின் கதவுகளை இயந்திரம் மூலம் உடைத்து உள்ளே சென்று வெள்ளிப் பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளனர் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

மொத்தம் 25 கிலோ வெள்ளிப் பொருட்கள், 13.6 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 12,500 ரொக்க பணம் ஆகியவை அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப் பதிந்த விளாத்திக்குளம் போலீஸார் மாரிமுத்து, முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களுக்கு வேறு ஏதும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!