விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...
விளாத்திகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மாணவ, மாணவிகளிடையே விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசு மட்டுமின்றி தனியார் அமைப்புகளும் மாரத்தான் ஓட்டம், மினி மாரத்தான் ஓட்டம், கபடி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, "இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கண்டறியும் நோக்கில்" மாநில அளவிலான மாபெரும் மினி மாரத்தான் போட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்றது. ஆண்களுக்கு 14 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கு 4 கிலோ மீட்டர் தூரமும் என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
இந்த மினி மராத்தான் போட்டியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விளாத்திகுளம் - கோவில்பட்டி சாலையில் நடைபெற்ற மாநில அளவிலான மினி மராத்தான் போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஓடிய நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீரங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம், ரொக்கப் பணம் உள்ளிட்டவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், இந்த மினிமாரத்தான் போட்டியில், கலந்து கொண்டு ஓடிய 53 வயதான முத்தையா என்பவரை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu