விளாத்திக்குளத்தில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை.. 2 கடைகளுக்கு சீல் வைப்பு..
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை, கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை, காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல் போன்றவை கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, சென்னையில் உள்ள மாநில உணவு பாதுகாப்புத் துறையில் வாட்ஸ்அப் புகார் சேவை எண் வசதியும், அந்தந்த மாவட்டங்களில் தனி புகார் சேவை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில், விளாத்திக்குளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் விளாத்திக்குளம் பகுதியில் உள்ள 6 கடைகளை திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, கண்ணன் மற்றும் வசந்தப்பெருமாள் என்பவர்களுக்குச் சொந்தமான கூல் டிரிங்க்ஸ் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதையெடுத்து, தொடர் விசாரணைக்காக, இரண்டு கடைகளின் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இரண்டு கடைகளையும் மூடி முத்திரையிடவும் நியமன அலுவலர் உத்திரவிட்டார். அதன் அடிப்படையில், அந்த இரண்டு கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டன.
மேலும், கமலாபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் இல்லாமல் சில்லறை உணவு அங்காடி நடத்துவது கண்டறியப்பட்டது. இதையெடுத்து, அவருக்கு ரூ. 5000 அபராதம் விதிக்க ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு வணிகர்கள் யாரேனும் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாகக் கடைகள் மூடப்படும். இந்த விவகாரத்தில் எந்தவித தளர்வும் வழங்கப்படமாட்டாது.
எனவே, அரசின் விதிகளையும், அரசு உத்திரவினையும் பின்பற்றி, தங்களது தொழிலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் உணவு வணிகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மேலும், தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனை குறித்து நுகர்வோர்களுக்குத் தெரியவந்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின் 8680800900 என்ற புகார் எண்ணிற்கோ புகார் அளிக்கலாம். அவர்களது விபரம் ரகசியம் காக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu