வேம்பாரில் பேக்கரிக்கு சீல்.. உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை...

வேம்பாரில் பேக்கரிக்கு சீல்.. உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை...
X
தூத்துக்குடி மாவட்டம், வேம்பாரில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று தொழில் புரிய வலியுறுத்தி, அரசிதழ் மற்றும் தினசரி பத்திரிகைகளில் பொது அறிவிப்பு பிரசுரித்தல், பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியீடுதல், விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் மேளா போன்றவற்றை உணவு பாதுகாப்புத் துறையானது நடத்தி வந்தது.

இருப்பினும், மாவட்டத்தில் இன்னும் பல உணவுத் தொழில் சார்ந்த வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமின்றி தொழில்புரிந்து வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே, வணிகர்களின் இந்த சட்ட விதிமீறலை தடுக்கும் வண்ணம், திடீர் ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் அடங்கிய குழுவினர் இன்று வேம்பாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஶ்ரீ தாய்மூகாம்பிகை அய்யங்கார் பேக்கரி என்ற நிறுவனம் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியான பின்னரும், தொடர்ந்து இயங்கி வருவது கண்டறியப்பட்டது. மேலும், அந்த பேக்கரியில் உரிய லேபிள் விபரங்களின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ப்ரட், பன், சேவு உள்ளிட்ட 30 கிலோ பல்வேறு உணவுப் பொருட்களின் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அந்த பேக்கரியில் பொதுமக்களின் பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அதீத சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டது. எனவே, உடனடியாக அந்த பேக்கரியை மூடுவதற்கு உரிய ஆணையை மாவட்ட நியமன அலுவலரிடம் பெற்று, மேற்படி ஶ்ரீ தாய்மூகாம்பிகை பேக்கரி என்ற நிறவனம் சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாரால் மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும், காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிவந்த இந்தியன் மளிகைக் கடையும் மூடப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:

இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத அல்லது காலாவதியான உரிமம் கொண்டுள்ள உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தினை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்ற பின்னரே, உணவு வணிகம் புரிய வேண்டும் என்று அறிவிக்கப்படுகின்றது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் பிரிவு 31-இன் கீழ் அனைத்து உணவு சார்ந்த வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற பின்னர்தான், உணவுத் தொழில் தொடங்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இயற்கை நீதிக்குட்பட்டு அநேக விழிப்புணர்வுகளும், அறிவிப்புகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளதால், எந்த உணவு வணிகராவது, உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நிறுவனம் அல்லது கடையை மூடி முத்திரையிடப்படும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் பிரிவு 55, 58 மற்றும் 63-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். எனவே, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள், சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமத்தினை பெற்றிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என மாரியப்பன் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!