காேழிக்கறிக்காக பாேலீஸ் அட்டகாசம்; கறிக்கடைக்காரருக்கு நேர்ந்த கதி

காேழிக்கறிக்காக பாேலீஸ் அட்டகாசம்; கறிக்கடைக்காரருக்கு நேர்ந்த கதி
X

காடல்குடி காவல் நிலையம் அருகே உள்ள கறிக்கோழி கடை.

காடல்குடியில் நள்ளிரவில் கறிக்கோழி கேட்ட போலீசாரின் போனை எடுக்காத கறிக்கடைக்காரரை போலீசார் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள என்.வேடப்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரது மகன் முத்துச்செல்வன்(33). இவர் தற்போது தனது மனைவி ஜெயாவுடன் காடல்குடியில் வசித்து வருகிறார். அங்குள்ள காடல்குடி காவல் நிலையம் அருகே சத்யாஸ்ரீ பிராய்லர்ஸ் என்ற பெயரில் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார்.

கடந்த 16ந்தேதி இரவு 11.40 மணிக்கு முத்துச்செல்வன் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. முத்துச்செல்வன் தூங்கி விட, அவரது மனைவி ஜெயா எடுத்து பேசியுள்ளார். எதிர் முனையில் பேசியவர் தான் காடல்குடி காவல் நிலையத்தில் இருந்து அழைப்பதாகவும், தங்களுக்கு 1 கிலோ கறிக்கோழி வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயா தனது கணவர் தூங்கி விட்டதாகவும், காலையில் வந்து தருவதாக கூறி செல்போன் அழைப்பினை துண்டித்துள்ளார்.

இருப்பினும் தொடர்ச்சியாக செல்போன் அழைப்பு வர, சைலைன்சில் போட்டு விட்டு ஜெயாவும் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் மீண்டும் இரவு பேசிய அதே எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. தாங்கள் காடல்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பாலகிருஷ்ணன், சதிஸ் என்றும், நேற்றிரவு போன் அடித்து எடுக்கவில்லை என்பதால், உங்கள் கடையில் இருந்து ஒரு கறிக்கோழி எடுத்து விட்டோம், அதற்கான பணத்தினை கொடுத்து விடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

அதற்கு கணவன், மனைவி இருவரும் பரவா இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதையெடுத்து கடந்த 18ந்தேதி மீண்டும் கறிக்கடைக்கு வந்த பாலகிருஷ்ணன், சதிஸ் இருவரும் மீன் வெட்டி தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். முத்துச்செல்வன் தனக்கு மீன் வெட்ட தெரியாது என்றதும், கத்தியை மட்டும் வாங்கி சென்றுள்ளனர். பின்னர் வந்து தாங்கள் கறிக்கோழி எடுத்ததை ஏன் மற்றவர்களிடம் கூறினாய் என்று கேட்டுள்ளனர். முத்துச்செல்வன் தான் இதைப்பற்றி யாரிடமும் கூறவில்லை என்று தெரிவித்தாக தெரிகிறது.

இதன் பின்னர் 500 ரூபாயை முத்துச்செல்வன் பாக்கெட்டில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று (19ந்தேதி) மதியம் முத்துச்செல்வன் கடையில் தூங்கி கொண்டு இருந்த போது தலைமைக்காவலர் பாலகிருஷ்ணன் காலில் லேசான காயத்துடன் கடைக்கு வந்துள்ளார். கோழி எடுத்ததை நீ சொல்லிய காரணத்தினால் எனக்கு பணியிட மாற்றம் வந்துள்ளதாக கூறி முத்துச்செல்வனுடன், பாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் பாலகிருஷ்ணன் முத்துச்செல்வனை தாக்கியுள்ளார். இதனை தடுக்க அருகில் இருந்த ராமர் என்பவர் முயல அவரை காவலர் சதிஷ் தாக்கியுள்ளார். பிரச்சினை பெரிதாக கிராம மக்கள் கூடியதால் மற்றொரு தலைமைக்காவலர் பாலமுருகனுடன், பாலகிருஷ்ணன், சதிஷ் ஆகியோர் காரில் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த முத்துச்செல்வன் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக முத்துச்செல்வன் கொடுத்த புகாரின் பெயரில் காடல்குடி போலீசார் பாலகிருஷ்ணன், சதிஸ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் (U/s-294(b), 323,324,427,506(ii)IPC ) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு கிலோ கறிக்கோழிக்காக கோழியை திருடியது மட்டுமின்றி கடை உரிமையாளரிடம் போலீசார் ரூத்ர தாண்டவம் ஆடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!