தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…
X

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் மற்றும் கைதான ஜெயராம்.

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, தமிழகத்தில் இருந்து கடல் வழியாக உணவுப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், உரம், பூச்சிக் கொல்லி மருந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள், பீடி இலை மூட்டைகள் உள்ளிட்டவை கடத்தப்பட்டன.

அந்த கடத்தலை தடுக்கும் வகையில், தமிழக கடற்கரை பகுதிகளில் உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கடலோர காவல் படையினர் கூட்டு ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் போலீஸார் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ரோந்துப்பணியின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த கஞ்சா, பீடி இலை மூட்டைகள் அடிக்கடி கைப்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் மாரிமுத்து தேவேந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனம் ஒன்று வேம்பார் கடற்கரை ஓரத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை போலீஸார் கண்டனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் அந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். சோதனையின்போது, 43 மூட்டைகளில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ எடையுள்ள பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, லாரி ஓட்டுநரான தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவரை பிடித்து போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் சட்டவிரோதமாக பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தி செல்ல இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, ஜெயராமை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 1500 கிலோ பீடி இலைகளையும், சரக்கு வாகனத்தையும் கைப்பற்றி தூத்துக்குடி சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேம்பார் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!