தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப் பணிகள்.. கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு...
ஆற்றாங்கரை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன்.
தமிழ்நாடு முழவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய செயலர் நிலை பதவியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுளனர். அவர்கள், மாதம்தோறும் அந்தந்த மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்களின் செயலாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியம் மேல்மாந்தை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி, பல்லாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகியவற்றில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா? என்பதை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
மேலும், மேல்மாந்தை பள்ளியின் வகுப்பறைகளையும் பார்வையிட்டு மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, கு. சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறையின் கட்டுமானப் பணிகள், அங்கன்வாடி சமையல் கூடம் போன்றவற்றை சிஜி தாமஸ் வைய்தன் நேரில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, குளத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி- 2 இன் கீழ் ரூ. 12.80 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் குடிநீர் ஊரணியை ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் படித்துறை. தடுப்புச்சுவர் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள உள்ளதை அவர் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து, மந்திக்குளம், ஆற்றாங்கரை, தத்தனேரி ஆகிய கிராமங்களில் வேளாண்மைத் துறையின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றி பயிர் சாகுபடி செய்தல் திட்டத்தில் உளுந்து, பருத்தி போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன், விவசாயிகளிடம் இந்தத் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பிறகு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் ஆகியவற்றில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மகளிர் திட்ட இயக்குநர் வீரபுத்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் சாந்தி ராணி, விளாத்திக்குளம் வட்டாட்சியர் சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu