விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
X

விளாத்திக்குளம் அருகேயுள்ள வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று பேசினார்.

காந்தியடிகளின் 155 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தின்போது, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

ஊராட்சிகளிலேயே வளர்ச்சி திட்டப் பணிகளை படிப்படியாக மேற்கொள்வதற்காக இந்த கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவாக்கப்பட்ட தினத்தில் இருந்து தொடர்ச்சியாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் ஊராட்சிகளுக்கு நிதி அதிகளவில் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதுபோல பேரூராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்ட பணிகள் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் எச்.சி.எல் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 44 ஊராட்சிகளையும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 51 ஊராட்சிகளையும் தத்தெடுத்து, மொத்தம் 95 ஊராட்சிகளுக்கும் தேவையான குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். பொதுமக்களாகிய உங்களுக்கு எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்றத்தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசு அலுவலர்களிடம் எடுத்துக்கூறி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, வில்வமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டுவரும் தையல் மையத்தினை அமை்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தையல் தொழில் செய்துவரும் பெண்களிடம் கலந்துரையாடினார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உடனிருந்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா