கோரிக்கை வருவதற்கு முன்பே நிறைவேற்றும் தி.மு.க. ஆட்சி- சொல்வது கனிமொழி

கோரிக்கை வருவதற்கு முன்பே நிறைவேற்றும் தி.மு.க. ஆட்சி- சொல்வது கனிமொழி
X

வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்.

மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வருவதற்கு முன்பே நிறைவேற்றி தருகின்ற ஆட்சியாக தி.மு.க. ஆட்சி உள்ளது என கனிமொழி எம்.பி. பேசினார்.

மக்களிடம் இருந்து கோரிக்கை வரும் முன் நிறைவேற்றி தரும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி உள்ளது என கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:-

இன்றைய தினம் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் சிறப்பு முகாமில் 13 திருநங்கைகள் மற்றும் 77 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ. 22.50 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படுகிறது. மேலும், பயனாளிகள் தங்களது வீட்டுமனைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக தனித்தனியாக எண்கள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும், சாலை வசதி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் வழியாக செய்து தரப்படும். அதேபோல், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் அரசின் வீடு வழங்கும் திட்டத்;தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும். குடிநீர் வசதியும் செய்து தரப்படும். மேலும் நீங்கள் இப்பகுதியை குளுமையான பகுதியாக மாற்றுவதற்கு நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நட வேண்டும்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்தப் பகுதியில் கண்மாய் கரையில் தடுப்பு சுவர் அமைத்து தரப்படும். மேலும் சிமெண்ட் சாலைகள், குடிநீர் தொட்டிகள், கலையரங்கம், பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் இந்தப் பணிகள் செய்து முடிக்கப்படும்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ. 1000 என வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி தந்து கொண்டிருக்கிறார்.

நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்யும் திட்டம், கொரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கும் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நிதியுதவியை அதிகப்படுத்தியுள்ளார்கள்.

வாக்குறுதிகளை மட்டுமல்லாமல் மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்துகொண்டிருக்கின்ற ஆட்சி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றவர்களுக்கு விரைவிலேயே வீடுகளும் கட்டி தரப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜெயா, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business