விளாத்திக்குளம் அருகே ராணுவ வீரர் குத்திக் கொலை: போலீஸ் குவிப்பு

விளாத்திக்குளம் அருகே  ராணுவ வீரர் குத்திக் கொலை: போலீஸ் குவிப்பு
X
விளாத்திக்குளம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன். (25). இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியஇராணுவத்தில் சேர்ந்தார். தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராணுவத்தில் இருந்து ஒரு மாத விடுப்பில் தனது சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வேல்முருகன் வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு ராணுவ வீரர் வேல் முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ராணுவ வீரரை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதனால், கிராம மக்கள் ஏராளமானோர் வேல்முருகன் வீட்டில் திரண்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சடலமாக கிடந்த ராணுவ வீரர் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை நிகழ்ந்த இடத்துக்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார்.

கொலை நிகழந்த இடத்தை பார்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விளாத்திகுளம் பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ராணுவ வீரர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வெம்பூர் கிராமம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் பெண் தகராறில் இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture