விளாத்திகுளம் அருகே கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்த நடிகர் விஷால்
நடிகர் விஷால் ஏற்பாடு செய்துக் கொடுத்த குடிநீர் தொட்டி.
தமிழில் பிரசாந்த் நடித்த தமிழ் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஹரி தொடர்ந்து, சாமி, ஆறு, சிங்கம், யானை உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவரான இயக்குநர் ஹரி இயக்கத்தில், தற்போது நடிகர் விஷால் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் "விஷால் - 34" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளான குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசியாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விஷாலிடம் அந்தக் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம மக்கள் கூறினர். இதையடுத்து, உடனடியாக தனது சொந்த பணத்தை செலவு செய்து போர்வெல் இயந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் சுமார் 60 அடி ஆழம் போர் போட்டுக் கொடுத்தது மட்டுமின்றி 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் தேக்க தொட்டிகள் அமைத்து பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக 6 குழாய்களையும் பொருத்தி கொடுத்துள்ளார்.
இந்தப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் கிராம மக்களிடம் பணிகள் நிறைவடைந்த பின் அதன் திறப்பு விழாவிற்கு தான் கட்டாயம் வருவதாக நடிகர் விஷால் கூறிச் சென்றுள்ளார். நடிகர் விஷால் படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் கிராம மக்களிடையே மட்டுமின்றி இந்தச் செய்தியை அறிந்த அனைவரிடமும் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu