தூத்துக்குடி மாவட்டத்தில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனம்
நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இன்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சேவையாற்றுவதற்காக, 2021-2022 ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி, பாளையங்கோட்டை உணவுப் பகுப்பாய்வுக் கூடத்திற்கு ‘நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடம்” ஒன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடமானது ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்திற்குச் சென்று சேவையாற்றி வருகின்றது. அதன்படி, இந்த வாகனம் கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தனது சேவையை முடித்துக்கொண்டு, தற்போது, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று முதல் 30.06.2023 வரை சேவையாற்ற உள்ளது. எனவே, தங்களது வீடுகளில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் தரத்தினை பரிசோதிக்க விரும்பும் பொதுமக்கள் நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இது ஒரு சிறப்பு கண்காணிப்புப் பணி என்பதினால், இந்த ஆய்வில் ஏதேனும் உணவுப்பொருட்களில்; தரம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அப்பொருட்களின் உணவு மாதிரி சந்தையிலிருந்து சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால், பொதுமக்கள் அனைவரும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பது குறித்து இவ்வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்த வாகனத்துடன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றம் கடைகளில் வாங்கம் பொருட்களில் முகப்புச்சீட்டில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றம் பிற விவரங்களை பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு விளக்குவார்கள்.
உணவில் கலப்படம் குறித்து கண்டுப்பிடிக்கும் எளிய பரிசோதனைகளை இந்த வாகனத்துடன் வரும் உணவுப் பகுப்பாய்வாளர்கள் பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு செய்து காட்டுவார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
நிழ்ச்சியில், மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார் (புதூர் மற்றும் விளாத்திகுளம்) ஜோதிபாசு (கோவில்பட்டி), உணவுப் பகுப்பாய்வாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu