வைகாசி விசாகம்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜூன் 2 -ல் உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், சஷ்டி திருவிழா மற்றும் ஆவணித் திருவிழா ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதில், கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்வையிடுவார்கள். இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா ஜூன் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜூன் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 02.06.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 2 ஆம் தேதி விடுமுறைக்குப் பதிலாக 10.06.2023 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வைகாசி விசாக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu