ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி: இருவரை கைது செய்த தூத்துக்குடி காவல்துறை
நிலமோசடி வழக்கில் கைதான சுப்புராஜ். மற்றும் லெனின்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கொல்லங்கிணறு பகுதியை சேர்ந்த குருவப்பன் மனைவி கிருஷ்ணவேணி (67) என்பவருடைய தந்தையான கணபதி என்பவரது பெயரில் நாரைக்கிணறு மருதன்வாழ்வு கிராம சர்வே எண்: 1338/2இல் 4 ஏக்கர் 81 சென்ட் நிலம் உள்ளது.
இந்நிலையில், அந்த நிலத்தின் உரிமையாளர் கணபதி இறந்துவிட்ட நிலையில், அவரது வாரிசுகள் சொத்து உள்ள ஊரில் வசிக்கவில்லை. இதுகுறித்து தெரிந்த கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (67) மற்றும் நாரைக்கிணறு மருதன்வாழ்வு பகுதியை சேர்ந்த லெனின் (46)) ஆகிய இருவரும் சேர்ந்து அந்த இடத்தை அபகரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கணபதிக்கு சொந்தமான 4 ஏக்கர் 81 சென்ட் நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் சுப்புராஜ் சொத்தின் உரிமையாளரான கணபதி போன்று போலியான ஆதார் அடையாள அட்டை தயார் செய்து, அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்தி கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவண எண் 1798/2020-இன் படி அந்த நிலத்தை லெனின் என்பவருக்கு மோசடியாக கிரைய பத்திரப்பதிவு செய்து கொடுத்து உள்ளார்.
மேலும், அந்த பத்திரப்பதிவில் மோசடியாக கிரையம் நடைபெறுகிறது என்பது தெரிந்தே தூத்துக்குடி மாவட்டம் ஓட்டுடன்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த சண்முகசாமி மகன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சாட்சியாக கையொப்பம் செய்து மோசடி கிரைய பத்திரத்திற்கு உடந்தையாக இருந்து உள்ளனர்.
இதுகுறித்து மோசடி செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கணபதியின் மனைவி கிருஷ்ணவேனி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத்திடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் காமராஜ், அனுசியா, முதல் நிலை காவலர்கள் சித்திரைவேல் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று (13.04.2023) 4 ஏக்கர் 81 சென்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த சுப்புராஜ் என்பவரை கோவில்பட்டி மந்திதோப்பில் வைத்தும், லெனின் என்பவரை நாரைக்கிணறு மருதன்வாழ்வு பகுதியில் வைத்தும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu