தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது
கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் செல்போன்கள்.
தூத்துக்குடி சத்யாநகர் சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த 30 ஆம் தேதி இரவு தனது மனைவி நாகஜோதியுடன் (29) இருசக்கர வாகனத்தில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதாநகர் ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்தனராம்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் அவர்களை பின் தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் நாகஜோதி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நாகஜோதி அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நகை பறிப்பில் ஈடுபட்டது தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தியாகு மகன் அர்னால்டு (23) மற்றும் தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்அனிபா மகன் பின்லேடன் (22) ஆகியோர் என தெரியவந்தது.
இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் எதிரிகளான அர்னால்டு மற்றும் பின்லேடன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 1,20,000 மதிப்புள்ள 4 சவரன் தங்க நகை, திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu