தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மத்திய அரசு செயலாளர் ஆய்வு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் அமைக்கப்பட்டு வரும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையத்தை மத்திய அரசு அமைச்சக செயலாளர் சுதன்ஷ் பந்த் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் ஆய்வு செய்தார்.
நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் முக்கிய துறைமுகமாக கருதப்படும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் சுதன்ஷ் பந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு, திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், 5 மெகாவாட் தரை தள சூரிய மின் நிலையம் மற்றும் 2 மெகாவாட் தரைதள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் துறைமுக நுழைவு வாயிலை அகலப்படுத்தும் திட்டம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சரக்குபெட்டக கண்காணிப்பு வசதி போன்ற திட்டங்களை செயல்படுத்தி பசுமை துறைமுகமாக திகழ்வதற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் சுதன்ஷ் சந்த் பாராட்டினார்.
துறைமுகத்தில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் விளக்கி கூறினார். தொடர்ந்து, துறைமுக பகுதியில் 4000 சதுர மீட்டர் நில பரப்பளவில்; நடவு செய்யப்பட்டுள்ள 500 மூலிகை செடிகள் மற்றும் மரங்கன்று தோட்டத்தினை சுதன்ஷ் பந்த் திறந்து வைத்தார்.
பின்னர், புவிசார் குறியீடுகளுடன் திறந்த மூல தளத்தில் உருவாக்கப்பட்ட இணைய அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்பையும் அவர் திறந்து வைத்தார். இந்த செயலியானது பல்வேறு கட்டிடங்கள், மனைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் நில ஆக்கிரமிப்பின் நிலையை குறித்து எச்சரிக்கை செய்யும் வசதி மற்றும் அடையாளம் காணும் வசதி போன்ற வசதிகளை பெற்றுள்ளது.
அதன்பிறகு, ரூ. 2.1 கோடி செலவில் 2 வருடத்திற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தற்போதுள்ள சர்வர் அமைப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கிளவுட் அடிப்படையிலான இடம்பெயர்வு அமைப்புடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தும் திட்டத்தினை சுதன்ஷ் பந்த் துவக்கி வைத்தார். மேலும், ரூ. 1.75 கோடி செலவில் உயர் அழுத்த மின்சார வலையமைப்பினையும் அவர் துவக்கி வைத்தார்.
இதுதவிர, ஆத்ம நிர்பார் மற்றும் நவீன இந்திய திட்டத்தின்கீழ் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் கைபேசி செயலி மற்றும் மாலுமி தகவல் என்ற செயலியையும் சுதன்ஷ் பந்த் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உட்கட்டமைப்பு திட்டப் பணிகளை உரிய நேரத்தில் முடித்து, எளிமையான வர்த்தகம், துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உபயோகிப்பாளர்களை கவரும் பச்சை அமோனியா திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் துறைமுகத்தை நவீனமயமாக்க வேண்டும். வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் வளர்ச்சி பணிகள் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது/
இவ்வாறு அவர் கூறினார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu