8 மணி நேரம் தொடர்ந்து சதுரங்கம் விளையாடி சாதனை படைத்த தூத்துக்குடி மாணவர்

8 மணி நேரம் தொடர்ந்து சதுரங்கம் விளையாடி சாதனை படைத்த தூத்துக்குடி மாணவர்
X

சட்டக் கல்லூரி மாணவர் கார்த்தி கணேஷ் 8 மணி நேரம் தொடர்ந்து சதுரங்க போட்டிகளில் விளையாடி உலக சாதனை படைத்தார்.

தூத்துக்குடியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் 8 மணி நேரம் தொடர்ந்து சதுரங்க போட்டிகளில் விளையாடி உலக சாதனை படைத்தார்.

தூத்துக்குடி இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி கணேஷ். இவர், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கார்த்தி கணேஷ் தனது 7 வயது முதல் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

குறிப்பாக, மாவட்ட அளவிலும், அதன் பிறகு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார் மாணவர் கார்த்தி கணேஷ். இந்த நிலையில், சதுரங்க விளையாட்டு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகளில் மாணவர் கார்த்தி கணேஷ் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒருபகுதியாக, சதுரங்க விளையாட்டில் உலக சாதனை படைக்க வேண்டி தொடர்ந்து 8 மணி நேரம் ஒரு நிமிடம் விளையாடக்கூடிய புல்லட் சதுரங்க போட்டியை ஆறு சிறந்த வீரர்களுடன் சுமார் 250 போட்டியில் விளையாடி அதில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார் மாணவர் கார்த்தி கணேஷ்.


இவர், இதற்கு முன்பு தொடர்ந்து 100 புல்லட் சதுரங்க விளையாட்டு போட்டி விளையாடியதே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை கார்த்தி கணேஷ் முறியடித்து உள்ளார். இதைத் தொடர்ந்து, நோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் அதன் தூதர் டாக்டர் பாலாஜி சொக்கலிங்கம் உலக சாதனை படைத்த சட்டக் கல்லூரி மாணவர் கார்த்திக் கணேஷுக்கு நோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, பல்வேறு சதுரங்க போட்டி குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளதாக மாணவர் கார்த்தி கணேஷ் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!