தூத்துக்குடியில் ரூ. 1 கோடி மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரம் கடத்தல்

தூத்துக்குடியில் ரூ. 1 கோடி மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரம் கடத்தல்
X

பறிமுதல் செய்யப்பட்ட உர மூட்டைகள்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரம் கடத்தல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக மத்திய அரசின் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 33 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு துறைமுக வளாகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், அந்த பொட்டாஷ் உரத்தை ஒரு கும்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து டிப்பர் லாரியின் மூலம் மத்திய அரசின் இந்தியன் பொட்டாஷ் உரம் தேக்கி வைக்கக்கூடிய குடோனுக்கு கொண்டுச் செல்லாமல் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் எழுந்தது.

கடத்தப்பட்ட உர மூட்டைகள் முள்ளக்காடு அருகே உள்ள ராஜீவ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு உப்பு குடோனில் பதுக்கி வைத்து இருப்பதாகவும், அந்த உர மூட்டைகளை விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட உப்பு குடோனுக்கு சென்று சோதனை செய்ததில் அங்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரம் பதுக்கி வைக்கப்பட்டு மூட்டைகளாக மாற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அவ்வாறு மாற்றப்பட்ட உர மூட்டைகள் லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு கடத்தி விற்பனை செய்ய இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து கடத்தப்பட இருந்த 150 டன் பொட்டாஷ் உரம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் மற்றும் லாரி டிரைவர், லோடுமேன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்தின் மூலம் வெளிநாட்டில் இறுந்து இறக்குமதி செய்யப்பட்டு மத்திய அரசின் நிறுவனமான இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்திற்கு இறக்கப்பட வேண்டிய 150 டன் பொட்டாஷ் உரம் கடத்தப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்