தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் ரூ. 8 கோடி மோசடி: இருவர் கைது
பைல் படம்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த பிரின்ஸ் மகன் ஸ்டேன்லி சாம்ராஜ் (47) என்பவர் சிமெண்ட், உப்பு மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அவரது பள்ளி நண்பரான தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த நளராஜ் மகன் சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகி தான் உப்பு மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும், ஸ்டேன்லி சாம்ராஜூடன் சேர்ந்து வியாபாரம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சீலன் செல்வராஜ் அவருடன் வியாபாரம் செய்துவரும் தூத்துக்குடியை சேர்ந்த கேசவமூர்த்தி மகன் விஜய் என்பவரையும் ஸ்டேன்லி சாம்ராஜுக்கு அறிமுகப்படுத்தி, சீலன் செல்வராஜ் மற்றும் விஜய் ஆகியோர் ஸ்டேன்லி சாம்ராஜ் நிறுவனத்தில் உப்பு, இரும்புபொருட்கள் வாங்கப் போவதாக போலியான கொள்முதல் ஆணையை காண்பித்து நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.
பின்னர், அவருடைய வங்கி கணக்குகளில் இருந்து 2020 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை 8 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 741 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு எந்தவித வியாபாரமும் செய்யாமல் ஏமாற்றி உள்ளளர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஸ்டேன்லி சாம்ராஜ் கடந்த 22.02.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மோசடி செய்ததாக சீலன் செல்வராஜ் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu