தூத்துக்குடி துறைமுக தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

தூத்துக்குடி துறைமுக தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு
X

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துறைமுக சம்மேளன தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

துறைமுகங்களில் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, சிஐடியூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஹெச்.எம்.எஸ். தொழிலாளர்கள் சங்கம் என ஐந்து துறைமுக சம்மேளனங்களின் தலைவர்கள் எடுத்த முடிவின்படி கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 26 ஆம் தேதி நாடு முழுவதும் 11 பெரிய துறைமுகங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் துறைமுக சபை நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 2021 முதல் 2026 ஆம் ஆண்டு வரை துறைமுக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்து ஒப்பந்தம் தொழிற்சங்க தலைவர்கள் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. மேலும், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று டெல்லியில் நவம்பர் 6 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்துக் கொண்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் அகில இந்திய ஐந்து துறைமுக சம்மேளன தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தொழிற்சங்க சம்மேளன தலைவர் முகமது ஹணிப் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டு காலம் போனஸ் வழங்க முடிவு செய்து தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆனதை தொடர்ந்தும், டெல்லியில் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க நவம்பர் 6 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தும் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா