தூத்துக்குடி மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 3.87 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 3.87 லட்சம் நலத்திட்ட உதவிகள்
X

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில்ரூ. 3.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திய பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தினார். மேலும், மனு அளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை அவர்கள் இருப்பிடத்துக்கே சென்று நேரில் சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 17 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

மேலும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 21 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

மேலும், சீனாவில் உள்ள ஹாங்கோ நகரில் நடைபெற்ற நான்காவது ஏசியன் பாரா கேம்ஸ்சில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் அ. குமாரபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், மாற்றுத்திறனாளியுமான சோலைராஜ் என்பவர் கலந்துகொண்டு தடகள விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அவர், மாவட்ட ஆட்சியரிடம் தங்கப்பதக்கத்தினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ. 43,832 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், 3 பயனாளிகளுக்கு ரூ. 16,023 மதிப்பிலான இலவச தேய்ப்புப் பெட்டிகளையும், உலமா மற்றும் பணியாளர் நல வாரியத்தின் மூலம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த நலவாரிய உறுப்பினர் ஆசியா பிர்தவ்ஸ் என்வரின் மகள் மரியம் என்பவர் சென்ட்ரச் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருவதற்கு ரூ. 1,500 கல்வி உதவித்தொகைக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி செல்லையா என்பவர் காதொலி கருவி வேண்டி மனு அளித்த நிலையில், அந்த மனுவின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளி பயனாளியான செல்லையாவுக்கு ரூ. 2,960 மதிப்பிலான நவீன காதொலி கருவியினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உடனிருந்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!