அதிமுகவினர் அனைவரும் மதுரை மாநாட்டில் கலந்து கொள்ள, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வலியுறுத்தல்

அதிமுகவினர் அனைவரும் மதுரை மாநாட்டில் கலந்து கொள்ள, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வலியுறுத்தல்
X

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.

மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டில் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 20 -ம் தேதி மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு செல்வது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான சண்முகநாதன் பேசியதாவது:

மதுரையில் ஆகஸ்ட் 20 ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு அதிக அளவில் கட்சி நிர்வாகிகள் செல்வது குறித்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் . ஜெயலலிதா காலத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களாக இருந்த அதிமுகவில் தற்போதைய பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 கோடியே 47 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்து உள்ளார்.

உலகளவில் தரவரிசை பட்டியலில் ஏழாவது பெரிய கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உருவாகி உள்ளது. நாம் தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களின் உற்சாகத்துடன் செயல்படுவதன் காரணமாக விரைவில் திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்படும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த மாநாடு அமையும்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காத தொண்டர்கள் அதிமுகவில் உள்ளதால் யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் வெல்ல வேண்டும்.

அதன்பிறகு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதியை கைப்பற்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கில் மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டு நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் அனைவரும் வந்தாலே மாநாடு மிகப்பெரிய வெற்றி பெரும். திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப நாம் அனைவரும் ஒரே குடும்பமாக மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!