மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆகஸ்ட் 9ல் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடியில் சிஐடியு தொழிற்சங்க மாநிலச் செயலாளர் ரசல் பேட்டியளித்தார்.
தூத்துக்குடியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து. சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் ரசல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டில் வேலையின்மை மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு தொழிலாளர் விரோத நடவடிக்கை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜூலை 25 ஆம் தேதி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்களை பொதுமக்களை ஒன்றிணைக்கும் கூட்டம் நடத்தப்படுவதுடன் மத்திய அரசுக்கு எதிராக 50 ஆயிரம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான அன்று மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் சென்னை மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் நடைபெறும் என ரசல் தெரிவித்தார். பேட்டியின்போது, ஐ.என்.டி.யூ.சி. மாநில துணைத் தலைவர் கதிர்வேல் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu