இலங்கையில் நிலநடுக்கம்: திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் நிலநடுக்கம்: திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களுக்கு எச்சரிக்கை
X

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களை எச்சரித்த கோயில் ஊழியர்.

இலங்கைக்கு அருகே நடுக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு பின்னர், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இலங்கைக்கு தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.2 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. இந்த நிலையில் மீன்வளத்துறை அறிவிப்பின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தர்கள் புனித நீராட திடீரென தடை விதிக்கப்பட்டது.

அப்போது, கடலில் புனித நீராடிக் கொண்டிருந்த பக்தர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோயில் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் கடற்கரையில் எச்சரிக்கை வாசகங்களை எழுப்பியபடி சென்று பக்தர்களை வெளியேறும்படி கூறினர்.

இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருவதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.

காவல் துறை மற்றும் கோயில் பணியாளர்களின் இந்த திடீர் தடை அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் பதற்றம் அடைந்ததால் காவல் துறையினர் அவர்களிடம் நிலநடுக்கம் குறித்த தகவலை தெரிவித்து கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதனால், திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட கோவில் நிர்வாகம் விதித்திருந்த தடை ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது பக்தர்கள் கடலில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடலின் ஆழமான பகுதிகளுக்கு பக்தர்கள் செல்லாமல் பாதுகாப்பான முறையில் புனித நீராடும் படி கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!