விஷம் குடித்து இறந்த உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
உடன்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவியான திமுகவைச் சேர்ந்த ஆயிஷா திட்டியதால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தூய்மை பணியாளர் சுடலைமாடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த சுடலைமாடனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, சுடலைமாடன் தற்கொலைக்கு காரணமான முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், உயிரிழந்த சுடலைமாடன் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணத் தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுடலைமாடன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர், உடன்குடி, உள்ளிட்ட 10 இடங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் சுடலைமாடனை சாதியைச் சொல்லி இழிவாக பேசிய பேரூராட்சி தலைவியின் மாமியார் ஆயிஷா கல்லாசி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்தநிலையில், ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு ஆகியோரை கைது செய்யக்கோரி திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு இருவரையும் கைது செய்ய வேண்டும், உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைரா ரமீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுடலைமாடனின் உறவினர்கள் உடன்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பதில் அளித்த தூய்மைப் பணியாளர்கள் ஆயிஷா கல்லாசி மற்றும் பாபு ஆகியோரை கைது செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu