திருச்செந்தூர் அருகே கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது

திருச்செந்தூர் அருகே கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது
X

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாராயணகுமார் மற்றும் ஷோபனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்செந்தூர் அருகே கீரனூரில் நிலப் பிரச்னை காரணமாக கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் கீரனூரைச் சேர்ந்தவர் நாராயணகுமார் (44). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி நாராயணகுமாரை சிலர் தாக்கி அவரிடம் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றதாக நாராயணகுமார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால் காவல்துறையினர் இந்த புகாரை முறையாக விசாரிக்காமல் தாமதித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு திடீரென நாராயணகுமாரின் வீட்டுக்குள் புகுந்த சிலர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். அதனை தடுக்கச் சென்ற நாராயணகுமாரின் மனைவி ஷோபனாவுக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த கணவன் மனைவி இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாராயணகுமார் மற்றும் அவரது மனைவி ஷோபனாவிடமும் காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சங்கரேஸ்வரன் மற்றும் அவரது உறவினரான கீரனூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (26) மற்றும் சிலர் சேர்ந்து தங்களை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆத்தூர் காவல் நிலையத்தினர் சங்கரேஸ்வரன் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!