Tiruchendur Temple Sasti Vizha திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Tiruchendur Temple Sasti Vizha  திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

திருச்செந்துார் கோயிலில் சஷ்டியையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. 

Tiruchendur Temple Sasti Vizha திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 7 ஆம் திருநாளான நேற்று இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tiruchendur Temple Sasti Vizha

முருப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 13 ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. 6 ஆம் நாளான 18 ஆம் தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 7 ஆம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாண விழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசுவரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகே உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

Tiruchendur Temple Sasti Vizha


திருக்கல்யாண வைபவத்தில் முகூர்த்தத்திற்கு முன்பாக மங்கல நாணை பக்தர்களிடம் காண்பிக்கின்றனர்.

மாலையில், சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி, சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து தெற்கு ரத வீதி, மேல ரதவீதி சந்திப்புக்கு சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் வந்தனர். அங்கு தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமி, அம்பாள் மாலை மாற்று நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனையான பின்னர், அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது.

மாலை மாற்று விழா முடிந்ததும், சுவாமியும், அம்பாளும் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளிலும் உலா வந்து சன்னதி தெரு வழியாக கோவிலை சென்றனர். பின்னர் இரவு ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீகமுறைப்படி வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!