திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா; சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா; சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா
X

சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு, இன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 7 ஆவது திருவிழாவான இன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இன்று கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.


அதனைத் தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கார தீபாரனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தங்கச்சப்பரத்தில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் சிவப்பு வண்ண மலர்களை தூவி அரோகரா பக்தி கோஷங்கள் முழங்க சுவாமியை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எட்டு வீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட சுவாமி தரிசனம் செய்தனர். நாளை சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது.

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை