கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி தேரோட்டம்

கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி தேரோட்டம்
X

திருச்செந்தூர் கோவில் மாசி தேரோட்டம் 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

8-ம் திருநாளான நேற்று முன்தினம் அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

9-ம் திருநாளான நேற்று காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்க பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றனர். இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் தேரோட்டம் தொடங்கியது.

சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ரத வீதிகளைச் சுற்றி வலம் வரும் தேர் மீண்டும் நிலைக்கு வந்த பின்னர் தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெறும்.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

11-ம் திருநாளான நாளை சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

12-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil