திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளையில் சுவாமி அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஐந்தாம் திருவிழா அன்று இரவு 7:30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனையும், 7 ஆம் திருவிழா அன்று காலை சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8 ஆம் திருவிழா நண்பகல் பச்சை சாத்திக் கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10 ஆம் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேரானது நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேரானது நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைந்தது.
இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் தி;்ருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் சுமார் 200 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu