ஆபத்தான நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி? காவல்துறையிருக்கு பயிற்சி..
ஆபத்தான நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து திருச்செந்தூரில் காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எவ்வாறு முதலுதவி செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றலாம் என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் திருச்செந்தூரில் இன்று நடைபெற்றது.
திருநெல்வேலி ஸ்ரீசக்தி மருத்துவமனை சார்பாக மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு முதற்கட்டமாக திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கு திருச்செந்தூர் ஐஎம்ஏ மஹாலில் வைத்து பொம்மை மனித உடல் மற்றும் மின் திரை மூலம் விபத்து மற்றும் பல்வேறு பாதிப்புகள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதலுதவி செய்வது குறித்து செய்து காண்பித்து மிக சிறப்பாக செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.
முதலுதவி பயிற்சி வகுப்பின்போது, விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் உட்பட எதையும் முதலில் சாப்பிடுவதற்கோ, குடிப்பதற்கோ கொடுக்க கூடாது. காயமடைந்தவர்களுக்கு அடிப்பட்ட இடத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் காயத்தை சுத்தமான துணியால் கட்டி அதற்கு அழுத்தம் கொடுத்து கட்ட வேண்டும்.
ரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தில் ரப்பர் அல்லது நைலான் கயிற்றால் கட்டக்கூடாது. கை அல்லது கால் விரல்கள் துண்டிக்கப்பட்டால், அந்த துண்டிக்கப்பட்ட பாகத்தை சுத்தமான துணியால் மூடி, அதனை தண்ணீர் புகாமல் ஒரு பாலீதீன் பையில் போட்டு கட்டி ஐஸ் கட்டிகளை வைத்து ஒரு பெட்டியில் அல்லது வேறு ஒரு பாலீதீன் பையில் வைத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
தலைக் காயம் ஏற்பட்ட நபரை அனாவசியமாக அசைக்க வேண்டாம். வாய் மற்றும் மூக்கு பகுதியில் ரத்தப்போக்கு ஏதேனும் இருந்தால் அடிப்பட்டவரை ஒருபக்கமாக சாய்த்தவாறு படுக்க வைக்க வேண்டும். விபத்து நடந்த நிமிடத்தில் இருந்து, பாதிக்கபட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் வரை உள்ள நேரம் மிகவும் பொன்னானது.
எனவே, அவர்களை எவ்வளவு விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்க இயலுமோ அந்த அளவு வெகு விரைவாக மருத்துவமனையில் அனுமதித்து அவர்களது உயிரை காப்பாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு முதலுதவி பயிற்சிகள் குறித்து ஸ்ரீசக்தி மருத்துவனை எலும்பியல் மற்றும் விபத்து காய அறுவை சிக்சை மருத்துவர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் எடுத்துரைத்தனர்.
இந்த முதலுதவி பயிற்சி வகுப்பில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், காவல் ஆய்வாளர்கள் திருச்செந்தூர் முரளிதரன், திருச்செந்தூர் குற்றப்பிரிவு கனகபாய், தட்டார்மடம் பவுலோஸ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu