திருச்செந்தூர் கோயிலில் தைப்பூச விழா.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...
திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவை முன்னிட்டு கடலில் புனித நீராடிய பக்தர்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
திருச்செந்தூர் கோயில் கடற்கரை, கோயில் வளாகம், கிரிவீதி வளாகம் மற்றும், அனைத்து சமுதாய மடங்கள். தங்கும் விடுதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. நகர வீதிகளில் பக்தர்கள் முருகன் பாடல்களை மேளதாளத்துடன் ஆடிப்பாடி வந்தனர். அதிகப்படியான பக்தர்கள் ஒரு அடி வேல் முதல் 20 அடி வேல் வரை அலகு குத்தி வந்து நேர்ச்சை செய்தனர்.
ஞானமான பக்தர்கள் கிரிப்பிராகத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தனர். அதிகமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமணத் தடை அகலவும் அடிப் பிரச்சனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்காக முடிகாணிக்கை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பல்வேறு வகையில் நேர்த்திக் காணிக்கைகளை செய்தனர்.
தைப்பூச விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்பு தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கார்த்திக், அறங்கவலர் குழுத் தலைவர் அருள்முருகன், மற்றும் அறங்காவலர்கள் செய்து இருந்தனர். தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தலைமையில் ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 13 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu