திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. நேரில் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்தசஷ்டி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தவது வழக்கம்.
அதன்படி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு வருகின்ற 13.11.2023 அன்று தொடங்கி 19.11.2023 அன்று வரை கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய திருவிழா நாட்களான 18.11.2023 அன்று சூரசம்கார நிகழ்வும், 19.11.2023 அன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.
இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்வது, வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தம் இடங்கள் உள்ளிட்டவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu