உடன்குடி பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கைது
உடன்குடி பேரூராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி புது காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (வயது 55). இவர், உடன்குடி பேரூராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பணி மூப்பு அடிப்படையில் மேற்பார்வையாளர் பணி வழங்க பேரூராட்சி தலைவர் ஹிமைரா ரமீஸின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவியுமான திமுகவைச் சேர்ந்த ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
3 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் மேற்பார்வையாளர் பணி வழங்கப்படும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், தூய்மை பணியாளரான சுடலைமாடன் மறுப்பு தெரிவித்தாராம். இதனால் சுடலைமாடனை பழிவாங்கும் நோக்கத்தோடு ஜாதியை சொல்லி திட்டியதோடு அவரை சாக்கடை அல்ல நிர்ப்பந்திப்பதாகவு கூறப்படுகிறது.
இந்த நிலையில், மனமுடைந்த தூய்மை பணியாளர் சுடலைமாடன் திடீரென பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சுடலைமாடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, உடன்குடி பேரூராட்சியில் தற்போதைய தலைவரின் ஹிமிரா ரமீஸின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா கல்லாசின் தலையீடு அதிகமாக இருப்பதாக கூறி தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தூய்மை பணியாளரை ஜாதி பெயர் சொல்லி திட்டிய பேரூராட்சித் தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், வன்கொடுமை படுத்தப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்த சுடலைமாடன் என்பவருக்கு ஆதரவாக நீதி கேட்டும், இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிகளை புறக்கணித்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாக உடன்குடி தேர்வுநிலை பேருராட்சி துப்புரவு பணியாளர்கள் 24 பேரை போலீஸார் கைது செய்து உள்ளனர். கைது நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu