திருச்செந்தூர் கோவிலில் முழுநேர அன்னதான திட்டம்: துவக்கி வைத்த முதல்வர்
திருச்செந்தூர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் துவக்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.9.2021) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் இன்று துவக்கி வைத்த அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோவில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத் திட்டத்தின்கீழ்ப் பக்தர்களுக்குக் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும். தற்போது இத்திட்டத்தில் 754 திருக்கோவில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய காலகட்டங்களிலும் திருக்கோவில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது.
இதனைப் பின்பற்றி கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின் பசியினைப் போக்கும் விதமாகத் திருக்கோவில்கள் சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இறையருள் பெறத் திருக்கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்து முதுநிலை திருக்கோவில்களிலும் பெறப்பட்டுள்ளது.
தற்போது, பழநி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், திருவரங்கம் - அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஆகிய இரண்டு திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டு, திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகிய மூன்று திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே. செந்தில்ராஜ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu