ஆறுமுகநேரி பகுதியில் குறி வைத்து ஆடு திருட்டு: 34 ஆடுகள் மீட்பு
ஆறுமுகநேரி பகுதியில் மீட்கப்பட்ட ஆடுகள்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வைரவன் மனைவி பத்மாவதி (64) என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 13 ஆடுகள் நேற்று (19.04.2023) இரவு திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று (20.04.2023) பாத்திமா அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையில் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், தனிப்பிரிவு தலைமை காவலர் காமராஜ் மற்றும் தலைமை காவலர் ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், காயல்பட்டினம் ஓடக்கரை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் சின்னதுரை (45) என்பவரது வீட்டில் 34 ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்ததும், அதில் பத்மாவதியின் வீட்டில் திருடுபோன 7 ஆடுகள் இருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காயல்பட்டினம் காட்டுப்பள்ளி தெருவை சேர்ந்த சிராஜுதீன் மனைவி செய்யதுஅலி பாத்திமா (40), காயல்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மனைவி பெரிய பிராட்டி (52), காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்களான சம்சுதீன் மனைவி ரகமத் பிவி (48), காஜா முகமது மகன் முகமது சுபின் (21) மற்றும் சிலரிடம் இருந்து திருடப்பட்ட ஆடுகளும் அங்கு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் அங்கிருந்த 34 ஆடுகளையும் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சின்னத்துரை மற்றும் அவரது நண்பரான காயல்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் பூஜைமணி ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu