திருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் காலையில் 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி மதியம் 12 மணியளவில் யாகசாலையில் தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மேலும், சண்முக விலாசம் மண்டபத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகமாயி அலங்கார தீபாராதனைக்கு பிறகு தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி திருவிழாவின் 6 ஆம் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார்.
நண்பகல் 12 மணிக்கு யாகசாலை தீபாராதனைக்கு பின்பு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கச் சப்ரத்தில் சண்முகராஜ் மண்டபம் எழுந்தருளி. அங்கிருந்து மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளிகிறார். அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்தி நாதர் சூரனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளுவார். அங்கு முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனை சுவாமி வதம் செய்வார்.
சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடு கட்டுதல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிகளுக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பதினாறு இடங்களில் 12,500 வாகனங்கள் நிறுத்துவதற்கு தற்காலிக வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu