‘கருணாநிதியின் எண்ணங்களை ஸ்டாலின் நிறைவேற்றுகிறார்’- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

உடன்குடியில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி டி.டி.டி.ஏ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
முகாமை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசியதாவது,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி கிறிஸ்டியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி மற்றும் எட்டையபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கருணாநிதியின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இந்த பல்நோக்கு மருத்துவ முகாமில் பொதுமக்களிடம் செவிலியர்கள் ஆலோசித்து அவர்களுக்கு என்ன சிகிச்சை தேவைப்படுகிறதோ அந்த மருத்துவ நிபுணர்களிடம் அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த முகாமில் இதயம், சிறுநீரகம், நரம்பியல், தோல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை அளிக்கின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மட்டுமல்லாது தனியார் சிறப்பு மருத்துவ நிபுணர்களும் இந்த முகாமிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அட்டை வைத்திருந்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என எந்த மருத்துவமனையிலும் உயர்சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அட்டை இல்லாதவர்களுக்கு வழங்குவதற்கு இந்த முகாமில் வருவாய்த்து துறை மூலம் 60 கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வருவாய் சான்றிதழ்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இருதய பரிசோதனை உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முகாமில் செய்யப்படுகிறது.
நடமாடும் எக்ஸ் ரே வாகனம் மூலம் எக்ஸ்ரே சோதனையும் எடுக்கப்படுகிறது. முகாமில் பரிசோதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உங்கள் வீடுகளுக்கு அருகிலேயே உள்ள அறுவை சிகிச்சை வசதியுள்ள மருத்துவமனைகளில் அடுத்த 2 வாரங்களுக்குள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
முகாமில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu