தூய்மைப் பணியாளர் தற்கொலை வழக்கு: உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி சரண்

தூய்மைப் பணியாளர் தற்கொலை வழக்கு: உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி சரண்
X

உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா. (கோப்பு படம்).

உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா சரணடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடன்குடி புதுக்காலனியைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் கடந்த 17.03.2023 அன்று விஷமருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 23.03.2023 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுடலைமாடன் மனைவி தங்கம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், தி.மு.க.வைச் சேர்ந்த உடன்குடி முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி மற்றும் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் ஜாதி பெயரை கூறி திட்டி கொடுமைப்படுத்தியதால் தனது கணவர் விஷமருந்திவிட்டதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டியதாகவும் தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜா வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடனடியாக விசாரணை மேற்கொண்டு வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், உடன்குடியைச் சேர்ந்த ஆயிஷா கல்லாசி (62), உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, ஆயிஷா கல்லாசி மகன் அஷாப், ஆயிஷா கல்லாசி மருமகள் ஹூமைரா பாத்திமா ஆகியோர் சுடலைமாடனை தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்வதற்காக போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், தலைமறைவாக இருந்த ஆயிஷா கல்லாசிக்கு பணம் கொடுத்து உதவியதாக உடன்குடி திசையன்விளை ரோட்டைச் சேர்ந்த ஜெபசிங் (52), முத்தையாபுரத்தைச் சேர்ந்த செய்யது சிராஜூதீன் (36) ஆகிய இருவரையும் போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆயிஷா கல்லாசி தலைமறைவாக இருந்த நிலையில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார். போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story