திருச்செந்தூரில் 253 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்செந்தூரில் 253 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
X

திருச்செந்தூரில் மாற்றுத்தினாளி ஒருவருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அமைச்சர் நேரு வழங்கினார்.

திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 48 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு, 253 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 8.75 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 6 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.32.96 கோடி மதிப்பீட்டில் 12 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 253 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வழங்கினார்.

நிகழ்ச்சியின்போது, திருச்செந்தூர் நகராட்சி சார்பில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் நகராட்சி தினசரி சந்தை கட்டிடத்தையும், காயல்பட்டினம் நகராட்சி சார்பில் கோமான்புதூரில் ரூ .28 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பூங்காவினையும், காயல்பட்டினம் நகராட்சி தீவுத்தெருவில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியினையும் அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 10.08 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் திட்டத்தினை மேம்படுத்தும் பணிகளுக்கும், ஏரல் பேரூராட்சியில் மூலதன நிதி மானியத்திட்டத்தின்கீழ் ரூ. 1.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஏரல் பேரூராட்சி புதிய அலுவலகக் கட்டிடத்திற்கும், சாத்தான்குளம் பேருராட்சியில் ரூ. 5.62 கோடி மதிப்பீட்டில் கே.டி.கோசல்புரம் பேருந்து நிலையம் அமைப்பதற்கும் அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.

உடன்குடி பேரூராட்;சியில் மூலதன நிதி மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 1. 98 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை வணிக வளாகக் கட்டிடத்தையும், சாத்தான்குளம் பேரூராட்சியில் மூலதன நிதி மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 79.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை வணிக வளாகக் கட்டிடத்தையும் மற்றும் திருவைகுண்டம் பேரூராட்சியில் மூலதன நிதி மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 1.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை வணிக வளாகக் கட்டிடத்தையும் அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

மேலும், பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 1.85 கோடி மதிப்பீட்டில் சாத்தான்குளம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கும், ரூ. 1.81 கோடி மதிப்பீட்டில் திருவைகுண்டம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கும், ரூ. 1.81 கோடி மதிப்பீட்டில் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கும், ரூ. 1.82 கோடி மதிப்பீட்டில் ஆழ்வார்திருநகரி சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கும் அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.

இதேபோல, ரூ. 1.76 கோடி மதிப்பீட்டில் ஏரல் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கும், அக்கநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1.19 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறைக் கட்டிடம், ஒரு ஆய்வகக் கட்டிடம் கட்டுவதற்கும், தேரிக்குடியிருப்பு பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 63.54 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்கும், ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் மணியாச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டிடம் கட்டுவதற்கும், ரூ. 4.93 கோடி மதிப்பீட்டில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கும் அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 76 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 6 கோடி வங்கிக் கடனுதவிகளையும், ஆவின் நிர்வாகம் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ஆவின் முகவருக்கான பணி ஆணையையும் அமைச்சர் நேரு வழங்கினார்.

திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர் பதவியில் இருந்து தூய்மைப் பணி மேற்பார்வையாளராகப் பதவி உயர்வு பெறும் 6 நபர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி நியமன ஆணைகளையும், 41 தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட தூய்மைப் பணிகளுக்கான உபகரணங்களையும், பேரூராட்சிகளில் 126 தூய்மை பணியாளர்களுக்கு மழைநீர் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட தூய்மைப் பணிகளுக்கான உபகரணங்களையும், ஏரல் பேரூராட்சியில் ஒரு நபருக்கு கருணை அடிப்படையில் பதிவறை எழுத்தருக்கான பணி நியமன ஆணையையும், ஆவின் நிர்வாகம் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ. 5000 அரசு மானியத்துடன் ஆவின் முகவருக்கான ஆணையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ. 96600 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும் அமைச்சர் நேரு வழங்கினார்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story